தூதர்களை திரும்ப பெற்ற இஸ்ரேல்! பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் ஐரோப்பிய நாடுகள்!
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நார்வே, மற்றும் ஸ்பெயின் ஆகியவை அறிவித்திருந்த நிலையில், அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை இஸ்ரேல் திரும்ப பெற்றிருக்கிறது.
கடந்த 1988ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் தொடர்பான குரல்கள் தீவிரமாக எழுந்து வருகின்றன. இதே ஆண்டில்தான் பாலஸ்தீன விடுதலை அமைப்பு பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஜெருசலேம் தலைநகர் என்று அறிவிக்கப்பட்டாலும் அதன் எல்லைகளை குறிப்பிடவில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்காததோடு, மேற்குக் கரை மற்றும் காசாவில் பாலஸ்தீன அரசை உருவாக்குவதையும் இஸ்ரேல் எதிர்க்கிறது. அத்தகைய அரசு தங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இஸ்ரேல் வாதிடுகிறது. இஸ்ரேலுடன் அமெரிக்கா நட்புறவு கொண்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு இஸ்ரேலுக்கு திருப்தியுடையதாக இல்லை. இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள்தான் தீர்வு என கருதுகிறது.
ஆனால் அத்தகைய அரசு இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே வர வேண்டும் எனவும் அமெரிக்கா கூறுகிறது. இப்படி இருக்கையில் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை மே 28 முதல் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. நார்வேயின் பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், "பாலஸ்தீனம்-இஸ்ரேல் என இருநாடுகள் என்பது இஸ்ரேலின் நலனுக்கானது. பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் இல்லை என்றால் மத்திய கிழக்கில் அமைதி இருக்க முடியாது.
ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ள நிலையில், போருக்கு நடுவில் நாம் இரு நாடுகளை அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது என்பது, நீதியை நம்பும் ஆயுதம் ஏந்தாத கருத்தியல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகும்" என கூறியுள்ளார்.
அந்த வகையில், நார்வே பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து தனது நாடும் பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் என அயர்லாந்தின் பிரதமர் சைமன் ஹாரிஸ் தெரிவித்திருக்கிறார். இன்று, அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவிக்கின்றன. அந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தேசிய நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் இப்போது மேற்கொள்வோம் எனவும்,
அடுத்தடுத்த நாட்களில் இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்வதில் மேலும் பல நாடுகள் எங்களுடன் கைகோர்க்கும் என அவர் நம்புவதாகவும், ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸும் இதே அறிவிப்பை வெளியிட்டார்.
ஐரோப்பிய நாடுகளை கட்டி ஆண்டுக்கொண்டிருக்கும் பிரிட்டன் கடந்த வாரம் ஐநாவில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்கிற வாக்கெடுப்பில் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இப்படி இருக்கையில், ஐரோப்பிய நாடுகளாக அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்திருப்பது பிரிட்டனின் ஆதிக்கம் குறைந்திருப்பதை காட்டுகிறது.
அதேபோல இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் இந்த மூன்று ஐரோப்பிய நாடுகளிலிருந்து தங்களது தூதர்களை வாபஸ் பெற்றிருக்கிறது. இந்த மூன்று நாடுகளின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், "எங்களை குறைந்து மதிப்பிடுபவர்கள் மற்றும் எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்களை நாங்கள் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம். அயர்லாந்து, நார்வே நாடுகளிலிருந்து எங்கள் தூதரை திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ஹமாஸ் எனும் பயங்கரவாத அமைப்பு யூதர்கள் மீது மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியது. குறிப்பாக கொடூரமான பாலியல் வன்கொடுமைகளை செய்தது.
இதன் பிறகும் இந்த நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதன் மூலம், ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு ஆதரவளித்து வருகின்றன என்று கூறியுள்ளார்.