புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள், கடைகள் இயங்காது! Puducherry Current Bill
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்! பேருந்துகள், கடைகள் இயங்காது! Puducherry Current Bill
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் ஆகியவை இயங்காத நிலையில், தற்போது திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளை மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டும் இயங்குவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் தொடரும் மின் கட்டண உயர்வு!
புதுச்சேரியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி மின்கட்டணம் உயர்த்தப்படும். ஆனால் இந்த ஆண்டு நாடளுமன்ற தேர்தல் நடந்ததால் மின்கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த பின் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை தற்போது அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் - பள்ளிகளுக்கு விடுமுறை!
இதையடுத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனாலும் முழுமையாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி மின் கட்டணத்தில் மறைமுகமாக கூடுதல் கட்டணமும் அதிக அளவில் புதுச்சேரியில் வசூலிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்ட அறிக்கை!
இதுபற்றி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது!
இந்தப் போராட்டத்தினால் புதுச்சேரியில் வழக்கத்தை விட குறைந்த அளவில் மட்டுமே பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. மேலும் இதனால் கல்லூரி மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இருந்து சில பேருந்துகள் மட்டுமே புதுச்சேரி செல்கின்றன. இதனால் புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடைகள், பெட்ரோல் பங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.