அங்கன்வாடி ஊழியர்கள் வைக்கும் கோரிக்கை!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி வழங்க இயலாது

அங்கன்வாடி ஊழியர்கள் வைக்கும் கோரிக்கை!
அங்கன்வாடி பணிகளுக்கு 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 8,997 அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்த அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கடந்த வாரம் அறிவித்தனர்.
ரூ.3,000 – 9,000/- வரை ஊதியம் வழங்கப்படும் இந்த பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாணைக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி வெளியிட்ட அறிக்கையில்,
3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் சத்துணவு திட்டத்தில் 8,997 சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில் தேர்வு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.
அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பும், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 5-ம் வகுப்பும் படித்து இருக்க வேண்டும் என்று ஏற்கனவே இருந்த கல்வி தகுதியை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தமிழக அரசு மாற்றியுள்ளது.
இதனால் பத்தாம் வகுப்புக்கு குறைவாகப் படித்தவர்கள் அங்கன்வாடி உதவியாளர்கள், சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்கள்.
மேலும், கல்வித் தகுதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படாமல் தேர்வு செய்வது சட்டத்திற்கு புறம்பானதாகும்.
6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் இன்றும் இடைநிற்றல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
தமிழகத்தில், அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையலர் பதவிகளில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் சேர்வதன் மூலம், அரசுப் பணியில் இணைந்து சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற முடிந்தது.
கூடுதலாக விதவைகள், கைம்பெண்கள் மற்றும் இயற்கை பேரிடர், கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கன்வாடி உதவியாளர், சமையல் உதவியாளர் பணிகள் வழங்கப்பட்டு வந்தது.
எனவே, அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பதை அரசாணையில் திருத்தம் செய்து “பழைய கல்வி தகுதி அடிப்படையில்” அங்கன்வாடி உதவியாளர் மற்றும் சமையல் உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.