பிரதமர் மோடியின் படிப்பு விவரங்களை வெளியிட முடியாது; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி உயர்நீதிமன்றம் தடை

பிரதமர் மோடியின் படிப்பு விவரங்களை வெளியிட முடியாது; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பிரதமர் மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
பட்டப்படிப்பு தகவல்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தற்போது உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
பிரதமர் மோடி 1978-ல் இளங்கலை (BA) பட்டப்படிப்பை முடித்ததாக கூறப்படும் நிலையில், அதே ஆண்டு BA தேர்ச்சி பெற்ற மாணவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய மத்திய தகவல் ஆணையம் அனுமதித்திருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது. கடந்த 2016ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நீரஜ் குமார், 1978 ஆம் ஆண்டு BA தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களின் ரோல் நம்பர், பெயர், மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி/தோல்வி ஆகியவற்றுடன் கூடிய முடிவுகளைக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார். ஆனால் டெல்லி பல்கலைக்கழக அதிகாரி இந்த தகவலை வழங்கவில்லை. நீங்கள் கேட்டிருப்பது 'மூன்றாம் தரப்பு தகவல்' என கூறி மறுத்துவிட்டார். இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் குமார் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த ஆணையம், "இது தொடர்புடைய சட்டங்கள் மற்றும் முந்தைய முடிவுகளின் அடிப்படையில், ஒரு மாணவரின் (தற்போதைய/முந்தைய) கல்வி தொடர்பான விஷயங்கள் பொதுத் தளத்தில் வரும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதற்கேற்ப தகவல்களை வெளியிட வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு பொது அமைப்பு. பட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட பதிவேட்டில் கிடைக்கும். அது ஒரு பொது ஆவணம். எனவே அதை வெளியிடலாம்" என கூறியிருந்தது.
"ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 1978ம் ஆண்டு இளங்களை பட்டம் இருக்கிறது. அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார்.
அறிவிப்பு பலகைகள், பல்கலைக்கழக இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில் கூட இவை வெளியிடப்பட்டிருக்கிறது" என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்திருக்கிறார். தீர்ப்பின் முழு விரவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.